நம் இந்து மதத்துக்கு எல்லாம் இருந்தும் ஒன்றே ஒன்று தான் இல்லை.
அது தான், அதன் பெருமைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் சக்தி வாய்ந்த, உள்ளார்ந்த ஈடுபாடு கொண்ட ஒரு அறிவு விளக்க இயக்கம். இந்த பாரத நாட்டின் மிகப் பெரிய சொத்து என்ன என்று இங்கு வந்து திரும்பிய ஒரு ஜெர்மானியரிடம் கேட்ட போது
"பாரதத்திலுள்ள சாத்திரங்களும், வேதங்களும் உபநிஷத்துக்களும், இதிகாசங்களும்தான்" என்று பதில் அளித்தானாம் அந்த ஜெர்மானியன்.,
நம்மிடம் இந்த கேள்வியைக் கேட்டிருந்தால், நாம் இந்தப் பதிலை சொல்லியிருக்க மாட்டோம்.
ஏனென்றால் இப்படியொரு சொத்து தம்மிடையே இருப்பதே நமக்குத் தெரியாது.
தன் தந்தை கோடானு கோடி பெறுமதியான சொத்துக்களை தனக்கு விட்டு வைத்திருப்பதை தெரிந்து கொள்ளாமல், பிச்சையெடுக்கும் ஒரு குழந்தையைப் போல் -
நம் பழம் பெரும் அறநெறி ஆன்மீக நெறிச் சொத்துக்களைப் பற்றி துளியும் தெரிந்து கொள்ளாமல் மேல் நாட்டு நூல்களையும், ஆராய்ச்சிப் புத்தகங்களையும், நாம் பெரிய தத்துவச் சொத்துக்களாக நினைத்து போற்றிக் கொண்டிருக்கிறோம்.
இங்கு அந்த மேல் நாட்டவருக்கு முந்தியே தத்துவங்களும் ஞானங்களும் மலிந்திருந்தன.
அதைச் சொல்லத்தான் நமக்கு ஆளில்லை... ஓர் அமைப்பு இல்லை.
அந்தக் குறையைப் போக்க நம்மிடையே உருவாகிப் பேருருவாய் ஒரு தத்துவ விளக்க ஞானதீபமாய் - எளிமையாக, நமக்கு புரியும் மொழியில் அரிய கனத்த விஷயங்களையும் சிரிக்கச் சிரிக்க சின்னச் சின்ன கதைகளை வேடிக்கையாக ஒரு தாய் அம்புலியைக் காட்டி குழந்தைக்கு அன்னமூட்டுவது போல் - நமக்கு விளக்கமளித்து நமக்கு அறிவு அன்னம் அளிக்க அவதரித்திருப்பவர்.
- சுவாமி சின்மயானந்தர்.